உத்தரகோசமங்கை, ராமேஸ்வரத்தில் ஆருத்ரா காப்பு கட்டுதல் துவக்கம்
ராமேஸ்வரம்: ஆருத்ரா தரிசனத்தையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி நடராஜருக்கும், உத்தரகோசமங்கையில் மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி கோயிலில் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நேற்று இரவு 7:15 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இங்கு பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது. ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே நடராஜரின் திருமேனில் பூசப்பட்ட சந்தனம் படி களையப்பட்ட அபூர்வ தரிசனத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஜன.9ல் காலை 8:30 மணிக்கு கடந்த ஆண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு படி களையும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆருத்ரா தரிசனத்தன்று காலை 9:30 மணிக்கு மரகத நடராஜருக்கு 18 வகையான அபிஷேக,ஆராதனை நிறைவேற்றப்பட்டு சந்தனாதி தைலம் பூசப்படும். பின், இரவு 10:30 மணிக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்று, கல்தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் எழுந்தரும் நிகழ்ச்சியும், மறுநாள் ஜன.10 அதிகாலை 5:30 மணிக்கு அருணோதய நேரத்தில் சுவாமியின் திருமேனியில் சந்தனக்காப்பிடுதலும் நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
*ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன.10ல் நடக்கும் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நேற்று கோயிலில் சுவாமி நடராஜருக்கு கோயில் குருக்குள் காப்பு கட்டி மகா தீபாரதனை நடத்தினர். இன்று (ஜன.2) முதல் ஜன.9 வரை மாணிக்கவாசகர் பல்லக்கில் எழுந்தருளி கோயில் மூன்றாம் பிரகாரத்தில் வலம் வருவார்.