வைகுண்ட ஏகாதசி: திருமலையில் பக்தர் கூட்டம்
திருப்பதி : திருமலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வைகுண்ட வாயில் வழியாக செல்ல, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருமலையில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியின் போது, கருவறையை சுற்றியுள்ள வைகுந்த வாயில் திறக்கப்படுவது வழக்கம்.ஆண்டிற்கு, இரண்டு நாட்கள் மட்டுமே, இந்த வாயில் திறக்கப்படுவதால், அவ்வழியாக செல்ல பக்தர்கள் கூட்டம் திரளும். அதன்படி இன்று, திங்கட்கிழமை, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை, 2:00 மணிக்கு, வைகுண்ட வாயில் திறக்கப்பட உள்ளது.
இதை காண, நேற்று மதியத்திற்குள் காத்திருப்பு அறைகள், நாராயணகிரி தோட்டம், மாடவீதியில் உள்ள காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பின. 90 ஆயிரம் பக்தர்கள், நேற்று மதியத்திற்குள் திருமலையில் திரண்டனர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில், அன்னதானம், குடிநீர், பால் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருமலை முழுவதும் மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள தேவஸ்தான கோவில்களிலும், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. நேற்று முதல் திவ்ய தரிசனம், நேர ஒதுக்கீடுதரிசனம், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைகுழந்தைகளின் பெற்றோர், நன் கொடையாளர்கள்உள்ளிட்டோரின் தரிசனங்கள், ரத்து செய்யப்பட்டுள்ளது.