பூதப்பாண்டி கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
பூதப்பாண்டி : பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி- சிவகாமி அம்பாள் கோயிலில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரத்திற்கு கும்பாபிஷேகமும், சித்திரை மாத திருவிழா கொடியேற்றும் நடந்தது. பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி-சிவகாமி அம்பாள் கோயிலின் 250 ஆண்டு பழமை வாய்ந்த கொடிமரம் பழுதடைந்ததையடுத்து புதிய கொடிமரம் தேர்ந்தெடுக்கப்பட்டு பதப்படுத்தி கடந்த ஆறாம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட கொடிமரத்திற்கு செம்பு தகடுகளால் பாதுகாப்பு கவசம் அணிவிக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் (24ம் தேதி) காலை கணபதி ஹோமம், மாலை வாஸ்து பூஜை, மற்றும் முதல்கால யாகசாலை பூஜை, இரவுகொடிமரத்திற்கு அஷ்டபந்தன மருந்து சார்த்துதல் நடந்தது. நேற்று (25ம் தேதி) இரண்டாம் கால யாகசாலை பூஜையும் பூரணாகுதியும், மூலஸ்தான பரிவார மூர்த்திக்கு அபிஷேகம், கொடி மரத்திற்கு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டைனர். இரவு சுவாமியும் அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வந்தனர். தொடர்ந்து நடக்கும் விழாவில் தினமும் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் பவனி வருவர். மே மாதம் 3ம் தேதி நடக்கும் தேர் திருவிழாவில் அம்மன் தேரும், விநாயகர் தேரும் வீதி உலா வரும். விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஞானசேகர், உதவி கோட்ட பொறியாளர் முருகேசன், கண்காணிப்பாளர் நிர்மல்குமார், ஸ்ரீகாரியம் ஆறுமுக நைனார் ஆகியோர் செய்துள்ளனர்.