பொங்கல் விழா கோவையில் உற்சாக கொண்டாட்டம்
கோவை:கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில், பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். பொங்கல் விழா தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதும் தமிழர்கள் உள்ள பகுதிகளில், நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கடந்தாண்டுகளை ஒப்பிடுகையில், இந்தாண்டு பருவமழை கணிசமாக பொழிந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதனால், இந்தாண்டு பொங்கல் விழா, அதிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. ஒளி கொடுத்து தானியங்களை விளைவித்த சூரிய பகவானுக்கு, நன்றி செலுத்தும் விதமாக
அதிகாலையிலேயே எழுந்து, வீட்டு வாசல்களில் கோலமிட்டு பொங்கல் வைத்து வணங்கினர். புத்தாடை உடுத்தி, சுவாமிக்கு பொங்கல் படையலிட்ட பின் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கு பொங்கல், கரும்பு வழங்கி, வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பல்வேறு பகுதிகளிலும், உறியடித்தல், கயிறு இழுத்தல், இளவட்ட கல் துாக்குதல், கோலப்போட்டி, சிலம்ப போட்டி, தண்ணீர் நிரப்புதல், தேங்காய் உடைத்தல் உட்பட பல போட்டிகள் நடத்தப்பட்டன.