உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவம் கோலாகலம்!

திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவம் கோலாகலம்!

திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கிய நடைபெற்று வருகிறது. விழாவின் 2ம் நாளான நேற்று, உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி சூரிய பிரபையில் மலைக்கோவிலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வெள்ளி மயில் வாகனம்: 28ம் தேதி காலை பல்லக்கு வாகனத்திலும், மாலை வெள்ளி நாக வாகனத்திலும், 29ம் தேதி காலை அன்ன வாகனத்திலும், மாலை வெள்ளி மயில் வாகனத்திலும், 30ம் தேதி மாலை 4.30 மணிக்கு புலி வாகனத்திலும், இரவு 8 மணிக்கு யானை வாகனத்திலும் உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மே மாதம், 1ம் தேதி இரவு வெள்ளித் தேரும், 2ம் தேதி காலை யாளிவாகனம், மாலை குதிரை வாகனம் மற்றும் இரவு 8 மணிக்கு தெய்வானை திருக்கல்யாணமும் நடக்கிறது. 3ம் தேதி காலை கேடய உலாவும், மாலை கதம்பொடி உற்சவம் மற்றும் சண்முகபெருமானுக்கு உற்சவ நிகழ்ச்சியும், 4ம் தேதி காலை தீர்த்தவாரி உற்சவம் இரவு கொடி இறக்கமும் நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவையொட்டி தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. மேலும் மாலை 6 மணி முதல், இரவு 8.30 மணி வரை ஆன்மிக சொற்பொழிவும் நடக்கிறது. தேர் திருவிழா: பெரியநாகபூண்டியில் உள்ள முருகன் உபகோவிலான நாகேஸ்வர சுவாமி திருக்கோவிலிலும் சித்திரை மாத பிரம்மோற்சவம் நேற்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும், வரும் 1ம் தேதி திருத்தேர் வீதிகளில் பவனி உலாவும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தனபால் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !