அரிகேசவநல்லூர் கோயில்களில் மே 3ம் தேதி கும்பாபிஷேகம்!
வீரவநல்லூர்: அரிகேசவநல்லூர் கோயில்களில் வரும் மே 3ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.அரிகேசவநல்லூரில் கல்யாண சுந்தர விநாயகர், உச்சினிமாகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், லட்சுமி அம்மன், திரவுபதி அம்மன் கோயில்களில் வரும் மே 3ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதை முன்னிட்டு வரும் மே 1ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜை, மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை, கஜ பூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனையும், மாலை தீர்த்தஸங்கிரஹணம், விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், இரவு முதல்கால யாகசாலை பூஜை, தீபாராதனை நடக்கிறது. மே 2ம் தேதி காலை 2ம் காலயாகசாலை பூஜையும், மாலை 3ம் கால யாகசாலை பூஜையும், இரவு யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடக்கிறது. கும்பாபிஷேக நாளான 3ம் தேதி காலை நான்காம் காலயாக சாலை பூஜையும், கடம் புறப்படுதலும் நடக்கிறது. தொடர்ந்து கல்யாண சுந்தர விநாயகர், உச்சினிமாகாளி அம்மன், முப்பிடாதி அம்மன், லட்சுமி அம்மன், திரவுபதி அம்மன் ஆகிய கிராம தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகம் நெல்லை சுவாமி சங்கரானந்த மகராஜ், திருக்குற்றாலம் விவேகானந்த ஆஸ்ரமம் சுவாமி அகிலாந்தஜி, சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி மகாராஜா முன்னிலையில் நடக்கிறது. கும்பாபிஷேக விழாவில் அம்பை எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, நெல்லை சொக்கலிங்கம்பிள்ளை கிளாத் மெர்ச்சன்ட் அதிபர் வெங்கடாச்சலம், மேலதிருவேங்கடநாதபுரம் தென்திருப்பதி வெங்கடாசலபதி கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன் கலந்து கொள்கின்றனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, மஹேஸ்வர பூஜை, அன்னதானம் நடக்கிறது. இரவு பிரசன்னா பூஜை, ஸஹஸ்ர நாமார்ச்சனை, புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடக்கிறது. பின்னர் நெல்லை கண்ணன் குழுவினரின் பட்டிமன்றம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை அரிகேசவநல்லூர் சுப்பிரமணியபட்டர், சிவகாசி கார்த்திகேயசிவம் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்துகின்றனர். ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.