ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன் கத்தி போட்ட வீரக்குமாரர்கள்
சேலம்: ஓம்சக்தி, பராசக்தி கோஷத்துடன், கத்தி போட்டு, வீரக்குமாரர்கள் ஊர்வலமாக சென்றனர்.
சேலம், குகை, மூங்கப்பாடி தெரு, ராமலிங்க சவுடேஸ்வரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, அங்குள்ள விநாயகர் கோவில் நந்தவனத்திலிருந்து, நேற்று, அம்மன் வீதியுலா அழைத்து வரப்பட்டார். அப்போது, அவரவர் வீடுகள் முன் சுவாமி வரும்போது, மக்கள், தேங்காய் பழம் உடைத்து வழிபட்டனர். அத்துடன், கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. தேவாங்க குல இளைஞர்கள், வெற்று உடம்பில், கத்தியால் மார்பில் அடித்தபடி ஆடி வந்தனர். அதில், சிறுவர்கள் பலரும் பங்கேற்றனர். மதியம், கோவில் சமூக கூடத்தில் அன்னதானம் நடந்தது. தொடர்ந்து, கோவிலில் ஜோதி ஊர்வலம் நடந்தது. அதேபோல், செவ்வாய்ப்பேட்டை, தேவாங்கபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. தொடர்ந்து, சக்தி அழைப்பு ஊர்வலத்தில், ஏராளமான இளைஞர்கள், அலகு சேவை, கத்தி போட்டு வந்தனர். சிலர், வீரமுட்டி எனும் வேடமிட்டு வந்தனர். ஒரு கையில் கத்தி, வாயில் எலுமிச்சை பழத்துடன், கண்களை உருட்டி மிரட்டி, குழந்தைகளை பயமுறுத்திவிட்டு, ஆசிர்வதித்து சென்றனர். வீரக்குமாரர்கள், ஓம்சக்தி, பராசக்தி கோஷம் எழுப்பி, முக்கிய வீதிகள் வழியாக, கத்தி போட்டபடி, ஊர்வலமாகச் சென்றனர்.