உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலையில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

மருதமலையில் தைப்பூசத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

முருகனின் ஏழாம் படை வீடாக பக்தர்களால் கருதப்படும் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், நேற்று இரவு, 7:00 மணிக்கு விநாயகர் பூஜை மற்றும் வாஸ்து சாந்தி நடந்தது‌. தைப்பூச திருவிழாவின் முதல் நாளான இன்று அதிகாலை, 4:00  மணிக்கு நடை திறக்கப்பட்டு, 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை, 7:00 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க,  சேவற்கொடி வரையப்பட்ட, 200 மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்ட கொடியை, சிவாச்சாரியர்கள் கொடிமரத்தில் ஏற்றினர். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், அரோகரா அரோகரா என்ற பக்தி கோஷங்களை எழுப்பினர். அதன்பின் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி,  தெய்வானை சமேதராக, கற்பக விருட்ச வாகனத்தில் கோவிலை சுற்றி திருவீதியுலா வந்தார். மாலை, 5:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை முடிந்து, சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை சமேதராய், அனந்தாசனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தனர். நேற்று விடுமுறை தினம் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து, சுவாமியை தரிசித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !