உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் பணியில் ரூ.3 கோடி முறைகேடு? மூலவர் சுதை இல்லாமல் குடமுழுக்கு

கோவில் பணியில் ரூ.3 கோடி முறைகேடு? மூலவர் சுதை இல்லாமல் குடமுழுக்கு

காங்கேயம்: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, காங்கேயம் கோவில்களில் நடந்த திருப்பணியில், 3 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்துள்ளதாக, துறையின் கூடுதல் தலைமை செயலரிடம், புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், முத்துாரில், சின்னமுத்துார் செல்வக்குமாரசுவாமி கோவில், ஆத்தனுார் அம்மன், குப்பயண்ண சுவாமி ஆகிய, கோவில்கள் உள்ளன. நுாற்றாண்டு பழமை வாய்ந்த, இக்கோவில்கள், முத்தன், மணியன், சேரன், வெள்ளம்பர் மற்றும் பொருள் தந்த குல மக்களின், குல தெய்வமாக விளங்குகின்றன.இந்த கோவில்களில் வருமானம் அதிகரித்ததை தொடர்ந்து, 1979ல், அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.

இந்த கோவில்களின் நிர்வாகத்திற்கு, விழா கமிட்டியாக, அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியமும், அவரது குடும்பத்தாரும் பரம்பரையாக இருந்து வருகின்றனர்.இக்கோவில்களில் திருப்பணி மேற்கொள்வதற்கு என, முத்துார் காணியாளர்கள் அறக்கட்டளை நிறுவப்பட்டது. அது, 2008ல், முறைப்படி பதிவு செய்யப்பட்டது. அதில், பாலசுப்பிரமணியன் தலைமையில், ஆறு பேர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

கடந்த, 2006ல், கோவில் திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டு, அறக்கட்டளை சார்பில், நன்கொடை வசூலிக்கப்பட்டது.அந்த வகையில், இதுவரை, 7 கோடி ரூபாய் வரைவசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், வங்கிக் கணக்கில், 4 கோடி ரூபாய் மட்டுமே, கணக்கு காட்டப்பட்டுள்ளது.இது தொடர்பாக நடந்த ஆய்வில், அறக்கட்டளை குழுவிற்கு தெரியாமல், 3 கோடி ரூபாய் வரை, முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நன்கொடையில் முறைகேடு செய்ததாகவும், ஆறு ஆண்டுகளில் முடிக்க வேண்டிய திருப்பணிகளை, 13 ஆண்டுகளாக இழுத்தடிப்பதாகவும், குற்றம் சாட்டப்பட்டுள்ளது.முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அவற்றை மறைக்கும் வகையில், பிப்ரவரி, 5ல், குடமுழுக்கு நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக, அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியம் சார்பில், அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலரிடம், புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.முறைகேடுக்கு காரணமான நிர்வாகி மீதும், புகார் தரப்பட்டுள்ளது.

மூலவர் சுதை மாயம்!

கோவில் திருப்பணிகள் நடந்து வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன், புற்று மண்ணால் ஆன குப்பயண்ண சுவாமி கோவிலின், மூலவர் சுதை மாயமானது. அதை கண்டறிய, இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், மாயமான மூலவர் சுதைக்கு பதிலாக, வேறு ஒரு சிலையை வைத்து, கும்பாபிஷேகம் நடத்தும் முயற்சி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மூலவர் சுதை மாயமானது குறித்து, அறநிலையத் துறை கமிஷனருக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட பின், குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற, கோரிக்கை வலுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களின் உண்மைத் தன்மை குறித்து, விசாரித்து வருவதாக, அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !