உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

விருத்தகிரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ தேர் திருவிழாவில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம் 21ம் தேதி துவங்கியது. தினசரி ஆழத்து விநாயகர், சுவாமி, அம்பாள், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.

முக்கிய நிகழ்வாக, கடந்த 26ம் தேதி ஆறாம் நாள் உற்சவத்தில், கோவிலை கட்டிய விபசித்து முனிவருக்கு சுவாமி காட்சி தரும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. 9ம் நாள் திருவிழாவான நேற்று காலை பஞ்சமூர்த்திகள் உற்சவர்களை தேரில் வைத்து, தேர்க்கால் பூஜை நடந்தது. தொடர்ந்து, ஆழத்து விநாயகர் தேரில் புறப்பட்டார். கயிலை வாத்தியங்கள் முழங்க, நமச்சிவாய கோஷம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாட வீதிகள் வழியாக தேரை வடம்பிடி நேர்த்திக்கடன் செலுத்தினர். சண்முக சுப்ரமணியர், விருத்தகிரீஸ்வரர் சுவாமி தேர் புறப்பட்டது. அதன்பின், விருத்தாம்பிகை அம்மன், சண்டிகேஸ்வரர் சுவாமிகள் தனித்தனியே தேரில் வீதியுலா நடந்தது. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் ஆகியோர் தேர்திருவிழாவை துவக்கி வைத்தனர்.  ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் அகர்சந்த், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், துணை சேர்மன் ராணி தண்டபாணி, கோவில் செயல் அலுவலர் பழனியம்மாள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில், விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன் மற்றும் 400க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !