சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஜன., 30ல் தைப்பூச விழா துவக்கம்
திருச்சி: திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில், வரும், 30ம் தேதி, தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சக்தி தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஜன., 30ம் தேதி முதல், பிப்., 9ம் தேதி வரை நடைபெறும் தைப்பூசத் திருவிழா, 30ம் தேதி காலை, 8:45 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று முதல், மாரியம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பிப்., 8ம் தேதி காலை, 7:00 மணிக்கு, கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளும் மாரியம்மன், வழிநடை உபயங்கள் கண்டருளி, நொச்சியம் வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று, அன்று மாலையில், தீர்த்தவாரி கண்டருள்கிறார். இரவு, 10:00 மணிக்கு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இருந்து மாரியம்மனுக்கு, மங்கள பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்படும். பிப்., 9ம் தேதி காலை, மீண்டும் நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளும் அம்மன், இரவு, 10:00 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகம் நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை, கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில், அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.