பழநி மலைக்கு பாதயாத்திரை காவடி சுமந்து பக்தர்கள் பரவசம்
ஆனைமலை:ஆனைமலை சுற்றுப்பகுதிகளில் இருந்து, தைப்பூச திருவிழாவுக்காக பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்ல துவங்கி உள்ளனர்.ஆண்டுதோறும் பழநியில் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவுக்காக, பக்தர்கள் குறைந்தபட்சமாக, 15 நாட்கள் முதல் அதிகபட்சமாக, 48 நாட்கள் வரை விரதமிருந்து, மாலை அணிந்து பழநிக்கு பாதயாத்திரை சென்று முருகனை வழிபடுவது வழக்கம்.இதில், பலரும் வேண்டுதல் நிறைவேறுவதற்காக காவடி எடுத்து பாதயாத்திரை செல்கின்றனர். செல்லும் வழியெங்கும், கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, என, பக்தி கோஷமிட்டு செல்கின்றனர்.ஆங்காங்கே தங்கி ஓய்வெடுத்து, முருகனை மனமுருகி வேண்டி பாதயாத்திரை செல்கின்றனர்.வரும், 8ம் தேதி தைப்பூசம் என்பதால், ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு சுற்றுப்பகுதிகளில் இருந்து, இப்போதே பக்தர்கள் பழநிக்கு பாதயாத்திரை செல்லத்துவங்கி உள்ளனர்.ஆனைமலை சுற்றுப் பகுதியில் இருந்து பழநிக்குச் செல்வோர், ஆனைமலை - உடுமலை ரோட்டில் செல்கின்றனர். பழநி செல்லும் பக்தர்கள், பாதுகாப்பாக செல்ல, ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் வழங்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.வால்பாறை டி.எஸ்.பி., விவேகானந்தன் கூறுகையில், பாதயாத்திரை செல்லும் பக்தர்கள், ரோடுகளில் மிகவும் பாதுகாப்பாக, விழிப்புணர்வுடன் செல்ல வேண்டும்.இரவு நேரங்களில் பக்தர்கள் நடந்து செல்வது வாகன ஓட்டுனர்களுக்கு தெரிவதற்காக, ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் வழங்க திட்டமிட்டு உள்ளோம்.பழநிக்கு பாதயாத்திரை செல்வோர், நா.மூ.சுங்கம் காவல் உதவி மையத்தில், ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம், என்றார்.