தஞ்சை பெரிய கோவிலில் தினமும் குவியும் பக்தர்கள்
தஞ்சாவூர்; விடுமுறை நாளான நேற்று, தஞ்சாவூர் பெரிய கோவிலில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், 23 ஆண்டுகளுக்கு பின், 5ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அன்று மட்டுமே, 5 லட்சம் பக்தர்கள் வந்தனர்.
கும்பாபிஷேகத்தை காண முடியாத பக்தர்கள், அடுத்து, 48 நாட்கள் நடக்கும் மண்டலாபிஷேகத்தில் தரிசனம் செய்தால் சிறப்பு என்பதால், தினமும் ஆயிரக்கணக்கில் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக, விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், பக்தர்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. நேற்று விடுமுறை மற்றும் அமாவாசை என்பதால், பெரிய கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அவர்கள், இரண்டு மணி நேரம் வெயிலில், நீண்ட வரிசையில் காத்திருந்து, பெருவுடையார், பெரியநாயகி அம்பாளை தரிசனம் செய்தனர். கோவிலின் பிரதான நுழைவு வாயிலில், பக்தர்களையும், அவர்களின் உடமைகளையும், போலீசார் சோதனை செய்த பிறகே, அனுமதித்தனர். கோடை துவங்கி வெயில் கொளுத்தும் நிலையில், போதிய குடிநீர், கழிப்பறை வசதிகள்இல்லாததால் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். நீண்ட நேரம் வெயிலில் நிற்க முடியாமல் பெண்கள், முதியவர்கள் மயக்கம் அடைகின்றனர். எனவே, தற்காலிக மேற்கூரை அமைத்து தரவேண்டும் என பக்தர்கள்கோரிக்கை விடுத்து உள்ளனர்.