சித்தலூர் அம்மன் கோவில் தேரோட்டம் : பக்தர்கள் தரிசனம்
தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தியாகதுருகம் அடுத்த சித்தலூரில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயில் மாசித்திருவிழா கடந்த 21 ம் தேதி சிவராத்திரி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் உற்சவர் அம்மன் சிலை அலங்கரிக்கப்பட்டு திருவீதி உலா நடந்தது. நேற்று மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. இன்று தேர்த்திருவிழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. கருவறையில் உள்ள பிரம்மாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 3:00 மணிக்கு சுவாமி புறப்பட்டு அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து அர்ச்சனைகள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து திருத்தேரை வடம் பிடித்து பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து சென்றனர். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அய்யப்பா, நகர செயலாளர் ஷியாம் சுந்தர், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வரதம்மாள் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் செல்வராஜ் கலந்து கொண்டனர். தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். டி.எஸ்.பி., ராமநாதன் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் பஸ் நிலையத்திலிருந்து கோயிலுக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டது.