தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற திருப்பரங்குன்றம் கிராம சபை மனு
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை கொடுத்த உத்தரவினை அமல்படுத்த கோரி திருப்பரங்குன்றம் கிராம சபை, திருப்பரங்குன்றம் பூர்வீக மிராஸ் வகையறாக்கள் சார்பில் கோயில் நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது.
மனுவில் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாவது: திருப்பரங்குன்றம் கிராம பூர்வீக குடிமக்களாகிய நாங்கள் மன்னர் திருமலை நாயக்கர் காலம் தொட்டு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு திருப்பணி செய்து வருகிறோம். அதற்கான பூர்வீக மரியாதையும் இந்நாள்வரை பெற்று வருகிறோம். எங்கள் முன்னோர்கள் வழிபட்ட மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. மலை உச்சியில் தீபம் ஏற்றுவதால் எந்த ஒரு பிரச்னையும் வரப்போவதில்லை. எனவே கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று எங்கள் முன்னோர்கள் வழிபட்ட பாரம்பரிய தீபத்தூணில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றி பிரச்னைக்கு நிரந்தரக்கு தீர்வு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். தீப தூணில் தீபம் ஏற்றுவதில் அறநிலையத்துறைக்கு சிரமம் என நினைத்தால், ஆண்டுதோறும் நடைபெறுகின்ற மலை மேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழாவை கிராம மரியாதைக்காரர்களாகிய நாங்கள் சிறப்பாக நடத்தி வருகிறோம் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதித்தால் கிராம பூர்வீக மிராசுகள் தீபம் ஏற்ற தயாராக உள்ளோம் என தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.