மேட்டுப்பாளையம் குறிஞ்சீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே உள்ள குறிஞ்சீஸ்வரர் கோயிலில், மகா சிவராத்திரி விழா நடந்தது.
மேட்டுப்பாளையம் அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகரில், குறிஞ்சீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு, இரவு முதல் காலை வரை நான்கு கால பூஜைகள் நடந்தன. ஒவ்வொரு கால பூஜையிலும், சுவாமிக்கு, பால், தயிர், மஞ்சள், குங்குமம், பஞ்சாமிர்தம், பன்னீர் இளநீர், சந்தனம், விபூதி உட்பட பதினாறு வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. காலை ஆறு மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் குறிஞ்சீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை குறிஞ்சி நகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் செய்து இருந்தனர்.
இதே போன்று, சிறுமுகை அன்னதாசம்பாளையத்தில் உள்ள மாதேஸ்வரன் கோயிலில், மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு, 7 மணிக்கு சிவன் அலங்காரத்திலும், இரவு, 10 மணிக்கு முருகப்பெருமான் அலங்காரத்திலும், நள்ளிரவு, 12 மணிக்கு பெருமாள் அவதாரத்திலும், அதிகாலை, 3 மணிக்கு சிவன் பார்வதி அலங்காரத்திலும் மாதேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஒவ்வொரு முறையும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தன. கோவில் பூசாரி வெங்கடசாமி தலைமையில், குழுவினர் சிறப்பு பூஜைகளை செய்தனர். விழாவில் ஆன்மீக சொற்பொழிவு, பஜனையும், கிருஷ்ணா நாட்டியாலயா, மற்றும் விஷ்ணு நாட்டியாலயா குழுவினரின் நடன நிகழ்ச்சியும், வள்ளி கும்மி நிகழ்ச்சியும், திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற்றன. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.