ஆழ்வார்பேட்டையில் பஞ்சரத்ன கீர்த்தனைகளால் களைகட்டிய தியாகராஜ ஆராதனை
சென்னை: ஆழ்வார்பேட்டையில் ‘இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி’ சார்பில், 70க்கும் மேற்பட்ட கர்நாடக இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து, தியாகராஜ ஆராதனை விழாவை சிறப்பித்தனர்.
தியாகராஜ ஆராதனை என்பது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரும், ‘தியாக பிரம்மம்’ என போற்றப்படுபவருமான தியாகராஜரை போற்றி நடத்தப்படும் இசை திருவிழா. அந்த வகையில், ‘இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டி’ சார்பில் தியாகராஜ ஆராதனை, கடந்த 14ம் தேதி நடந்தது. ஆழ்வார்பேட்டை, எத்திராஜா கல்யாண மண்டபத்தில் நடந்த விழாவில், அவர் இயற்றிய புகழ்பெற்ற ஐந்து க்ருதிகள் அடங்கிய பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடப்பட்டன. இதில், கரூர் கிருஷ்ணமூர்த்தி, ஸ்ரீமுஷ்ணம் வீ.ராஜாராவ், நர்மதா, ஜெயலட்சுமி சேகர், அய்யர் சகோதரியர், ஸ்ரீரஞ்சனி கவுஷிக், முத்துக்குமார் உள்ளிட்ட மூத்த கலைஞர்களுடன், இளம் கலைஞர்கள் என, 70க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு உறுதுணையாக வீணை, மிருதங்கம், வயலின், புல்லாங்குழல், கடம், கஞ்சிரா, மோர்சிங் உள்ளிட்ட பக்கவாத்திய கலைஞர்களும் இணைந்தனர். இதனால், விழாவே இசை மழையில் களைகட்டியது. நிகழ்ச்சியில் தியாகராஜருக்கு சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனைகள் செய்யப்பட்டன. இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் தலைவர் கே.வீ.ராமச்சந்திரன், துணை தலைவர் வெங்கட்ரங்கம், கவுரவ செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.