அயோத்தியில் ராமர் சிலை வேறு இடத்துக்கு மாற்றம்
பிரயாக்ராஜ்: அயோத்தியில், தற்போது உள்ள தற்காலிக கோவிலிலிருந்து, ராமர் சிலையை வேறு இடத்துக்கு மாற்றும் பணியை, கோவில் அறக்கட்டளை துவக்கியுள்ளது. உ.பி., மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2.77 ஏக்கர் நிலத்தில், ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கியது.
மகிழ்ச்சி: சர்ச்சைக்குரிய நிலத்தில் இருந்த பாபர் மசூதி, 1992ல் இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட இடத்தில், ஒரு கொட்டகை அமைக்கப்பட்டு, அங்கு ராமர் சிலை வைக்கப்பட்டது. அங்கு தான், கடந்த, 27 ஆண்டுகளுக்கும் மேலாக, ராமர் சிலைக்கு தினமும் வழிபாடு நடத்தப்படுகிறது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை, பிரதமர், மோடி, கடந்த மாதம் அமைத்தார். இந்நிலையில், அயோத்தியில், ராமர் கோவில் கட்டும் பணியை, அறக்கட்டளை துவக்கியுள்ளது. இது பற்றி அறக்கட்டளையில் இடம் பெற்றுள்ள தலித் உறுப்பினர், கமலஷே்வர் சவுபால் கூறியதாவது: ராம ஜன்மபூமியில், தற்காலிக கோவிலில் வைத்து ராம பிரானை வழிபட்டு வந்தது, ஹிந்துக்களுக்கு பெரும் வேதனையாக இருந்தது. இப்போது, ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட உள்ளது, ஹிந்துக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
200 மீட்டர் துாரம்: முதல் கட்டமாக, தற்காலிக கோவிலில் உள்ள ராமர் சிலையை, வேறு இடத்துக்கு மாற்றும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, தற்காலிக கோவிலில் இருந்து, 200 மீட்டர் துாரத்தில், தனி இடம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு ராமர் சிலை மாற்றப்பட்டு, கோவில் கட்டி முடிக்கப்படும் வரை வழிபாடு நடத்தப்படும். இந்தப் பணிகள் வரும், 25க்குள் முடிக்கப்பட்டுவிடும். ஸ்ரீ ராம நவமி விழா, அடுத்த மாதம், 2ம் தேதி நடக்கிறது. அதற்கான கொண்டாட்டங்கள், மார்ச், கடைசி வாரத்தில் துவங்கும். இதற்கான ஏற்பாடுகளும், ராம ஜன்மபூமி யில் நடந்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
ஹோலிக்கு பின் மசூதி அறக்கட்டளை: சர்ச்சைக்குரிய நிலத்தில், ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றம், அயோத்தியில் முக்கியமான இடத்தில் மசூதி கட்ட, 5 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்பு வாரியத்திடம், உ.பி., அரசு வழங்க வேண்டும் என, உத்தரவிட்டது. இதையடுத்து, அயோத்தியில், 5 ஏக்கர் நிலத்தை, சன்னி வக்பு வாரியத்துக்கு, உ.பி., அரசு வழங்கியது. இந்த நிலத்தில், மசூதி, இந்திய - இஸ்லாமிய ஆய்வு மையம், மருத்துவமனை, நுாலகம் ஆகியவை கட்ட, சன்னி வக்பு வாரியம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், உத்தர பிரதேச சன்னி வக்பு வாரிய தலைவர், பரூக்கி, நேற்று கூறுகையில், ஹோலி கொண்டாட்டம் முடிந்த பின், மசூதி கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்கப்படும், என்றார்.