சுந்தர வரதராஜர் கோவில் சீரமைக்க எதிர்பார்ப்பு
வடக்குப்பட்டு: வடக்குப்பட்டு சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் நுழைவாயில் கதவு மற்றும் கோவிலை சீரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் அடுத்த, வடக்குப்பட்டு கிராமத்தில், சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.பழமையான இந்த கோவில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், இந்த கோவில் பராமரிப்பு இன்றி உள்ளது.கோவிலின் நுழைவு வாயிலின் மரக்கதவு சேதமாகி, எந்த நேரத்திலும் முறிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், நுழைவுவாயிலை அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும், வாகன மண்டபம் கூரை சேதமாகியுள்ளதால், மழை காலத்தில் தண்ணீர் கசிகிறது. கோபுரத்தின் பல இடங்களில், ஆல மரக்கன்றுகள் வளர்ந்து வருகின்றன. கலசம் சேதமாகி, சாய்ந்த நிலையில் உள்ளது.இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது: வடக்குப்பட்டு கிராமத்தின் அடையாளமாக இந்த கோவில் உள்ளது. பராமரிப்பும் இன்றி பொலிவிழந்துள்ளது. நுழைவு வாயில் கதவு எந்த நேரத்திலும் முறிந்து விழக்கூடிய நிலையில் உள்ளதால், கோவிலை பூட்டி வைக்க முடியவில்லை. கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்ய, அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.