திரவுபதியம்மன் கோவில் தேர்த்திருவிழா
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி தாலுகா ஆவத்தவாடி, சுண்டகாப்பட்டி, மோட்டூர் கிராம மக்கள் சார்பில், திரவுபதியம்மன், செல்லியம்மன், மாரியம்மன், காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று கோவில் பூசாரி சேகர், கரகம் சுமந்தபடி மேளதாளங்கள் முழங்க கோவிலுக்கு வந்தார். அப்போது, ஆண்களும், பெண்களும் திருமணம் யோகம், குழந்தை வரம் வேண்டி, தரையில் படுத்து கொள்ள, கரகம் எடுத்து வந்த பூசாரி பக்தர்கள் மீது நடந்து அருள் வழங்கினார். முன்னதாக, பெண்கள் மாவிளக்கை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு படைத்தனர். இதையடுத்து, கோவில் முன், காவல் காத்து வரும் குதிரை சிலைக்கு கொள்ளு ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. இன்று திரவுபதியம்மன், காளியம்மன் தேர் வீதி உலா செல்லுதல் நிகழ்ச்சியும், நாளை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் ஆகியவையும் நடக்க உள்ளன.