உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால் சுவாமி தேரோட்டம்: தேர்வடம் பிடித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

வேணுகோபால் சுவாமி தேரோட்டம்: தேர்வடம் பிடித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால் சுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று நடந்தது. நாமகிரிப்பேட்டையில் இருந்து, புதுப்பட்டி செல்லும் வழியில் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால் சுவாமி கோவில் உள்ளது. தமிழகத்தில் ஆதிசேஷன் பாம்புடன் உள்ள மூலவர் சிலை இங்கு உள்ளதால், மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா நடப்பது வழக்கும். இந்தாண்டு தேர்த்திருவிழா கடந்த, 6ல் யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. 7ல் காலை கொடியேற்றம், 10:30 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் வைதீக முறைப்படி நடந்தது. தொடர்ந்து மொய் எழுதுதல், அழைப்பு, அன்னதானம் ஆகியவை நடந்தது. மாலை குதிரை வாகனத்தில் பரிவேட்டை, இரவு சமாராதனை நடந்தது. நேற்று காலை சிறப்பு அபிஷேகம், சுவாமி திருத்தேருக்கு வருகை தருதல் நடந்தது. மாலை, 3:00 மணிக்கு திருத்தேரோட்டத்தை எம்.எல்.ஏ., சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ., இராமசுவாமி உள்ளிட்டோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். தேரை பெண்களே இழுத்து வந்தனர். இன்று இரவு, 7:00 மணிக்கு சத்தாரபணம் நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !