மழை வேண்டி அரச வேப்ப மரத்துக்கு திருமணம்
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே மழை வேண்டி அரச, வேப்ப மரத்துக்கு திருமணம் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காமராஜ் நகரில் அருள்மிகு பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. கோவிலின் முன்பு அரச மரமும், வேப்ப மரமும் இணைந்து வளர்ந்துள்ளன. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மழை வேண்டியும், பொதுமக்கள் எவ்வித நோயும் தாக்காமல் இருக்க வேண்டும் என, வலியுறுத்தி கோவிலின் முன்புள்ள இரண்டு மரங்களுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. விழாவையொட்டி, அதிகாலை விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பின், அரசமரம், வேப்ப மரத்திற்கு புத்தாடைகள் அணிவிக்கப்பட்டன. பெரிய மாலைகள் சாற்றி திருமணம் நடந்தது. இரு மரங்களுக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. விழாவையொட்டி, அருள்மிகு பட்டத்தரசி அம்மனுக்கு புதிய தங்கத்தாலி அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. விழாவில், பங்கேற்ற பெண்கள் அனைவருக்கும் வளையல்கள் வழங்கப்பட்டன. திருமணத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருமண ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.