வனபத்ரகாளியம்மன் கோவிலில் கேட்டில் நின்று அம்மனை தரிசித்த பக்தர்கள்
மேட்டுப்பாளையம்: அமாவாசையை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், பக்தர்கள் கேட் முன்பாக சூடம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து, அம்மனை வழிபடுவது வழக்கம். குறிப்பாக அமாவாசை நாட்களில், ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை அடுத்து, தமிழக அரசு உத்தரவின்பேரில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும், இரண்டு கேட்டையும் அடைத்து பூட்டி வைத்தனர். மேலும் பக்தர்களுக்கு தெரியும்படி பிளக்ஸ் வைத்துள்ளனர்.
அதில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர் நடவடிக்கையாகவும், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், மார்ச் 31-ஆம் தேதி வரை, பக்தர்களுக்கு வழிபாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது, என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு, பக்தர்கள் சுவாமி கும்பிட வந்தனர். ஆனால் கோவிலின் இரு கேட்டுகளும், அடைக்கப்பட்டதால் நுழைவாயில் கேட் முன்பாக, பக்தர்கள் சூடம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.