உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் மூலவர் சன்னதியில் தங்கத் தகடு பதிக்கப்பட்ட கதவுகள் பொருத்தம்!

திருச்செந்தூர் மூலவர் சன்னதியில் தங்கத் தகடு பதிக்கப்பட்ட கதவுகள் பொருத்தம்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் மூலவர் சன்னதியில், சிருங்கேரிமடம் சார்பில் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான, தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட கதவுகள் பொருத்தப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் விஜயம் செய்த, சிருங்கேரி ஜகத்குரு பாரதிதீர்த்த சுவாமிகள், நேற்று முன்தினம் காலை 5மணிக்கு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு, திரிசுதந்திரர்கள் சார்பில் பூரண கும்பமரியாதை வரவேற்பளிக்கப்பட்டது.தொடர்ந்து, 5.30 மணியளவில், அவர் மூலவர் சுப்பிரமணியர் சன்னதிக்குள் சென்று, சுவாமிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் செய்தார். பின்னர், 108 தங்கமலர்களால் அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டினார். இதைத் தொடர்ந்து, சிருங்கேரி மடம் சார்பில், 70 லட்சம் ரூபாய் மதிப்பில், தங்கத் தகடுகள் பதிக்கப்பட்ட, இரண்டு கதவுகள், மூலவர் சன்னதியில் பொருத்தப்பட்டன. அவற்றில், அறுபடை வீடு முருகனின் உருவங்கள் இடம்பெற்றிருந்தன. அந்தக் கதவிற்கான சாவிகளை பாரதிதீர்த்த சுவாமிகள், கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சனிடம் வழங்கினார். இதனிடையே, சிருங்கேரி மடம் சார்பில், 90 லட்சம் ரூபாய் செலவில், கோயிலில் ஆனந்த விலாச கல்மண்டபம் கட்டித்தரப்படவுள்ளதாக, அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !