ரமலான் தொழுகையை வீட்டிலேயே நிறைவேற்றுங்கள்!
சென்னை:ரமலான் நோன்பு காலத்தில், முஸ்லிம்கள் வீடுகளில் தனித்திருந்து தொழுகை நடத்த வேண்டும்; கூட்டமாக சேர வேண்டாம் என, இஸ்லாமிய மத குருக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முஸ்லிம்களின் புனித மாதமாக கருதப்படும், ரமலான் சில தினங்களில் துவங்க உள்ளது. பிறை பார்த்து, ரமலான் மாதத்தின்துவக்க நாளை, இஸ்லாமியவழிபாட்டு தலங்களின் தலைவர்கள் அறிவிப்பர்.ரமலான் மாதம் முழுவதும், உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும், தினமும் சூரிய உதயத்தில் இருந்து, மாலை நேரம் வரை, தண்ணீர், உணவு எதுவும் உட்கொள்ளாமல், நோன்பு கடைபிடிப்பர். ஒரு மாத நோன்பு முடிந்ததும், ரமலான் பண்டிகை கொண்டாடுவர்.
ரமலான் நோன்பு காலத்தில், இரவு நேரங்களில் முஸ்லிம்கள் மசூதிகளில் கூடி, நீண்ட நேரம் விழித்து, தொழுகை நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள தால், நோன்பு நாளில் மசூதிகளில் கூடி, தொழுகை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, முஸ்லிம்களுக்கு, இஸ்லாமிய மதகுருக்கள், சில வேண்டுகோள்களை விடுத்துள்ளனர். டில்லியில் உள்ள, பதேபூரி மசூதியில் உள்ள ஷாஹி இமாம், முப்தி முகமது முஹரம் அஹமது கூறியுள்ளதாவது:கொரோனா வைரஸ் தாக்கம், மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால், மருத்துவர்கள் மற்றும் அரசின் அறிவுரைப்படி செயல்பட வேண்டும். யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.அனைவரும் வீடுகளிலேயே, இரவு தொழுகை உள்ளிட்ட அனைத்து தொழுகைகளையும் நிறைவேற்றுங்கள். அண்டை வீட்டார்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்களை ஒரே வீட்டுக்கு அழைத்து, கூட்டமாக கூடி தொழ வேண்டாம். தனித்தே தொழுங்கள்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளார்.ஜாமியத் உலமா இ ஹிந்த் தலைவர், மவுலானா அர்ஷத் மதனியும், இதேபோன்ற வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் அரசு பணியில் உள்ள முஸ்லிம் ஐ.பி.எஸ்., - ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலரும், இதேபோன்ற வேண்டுகோளை விடுத்துள்ளனர்.