அர்ச்சகருக்கு நிவாரண உதவி பூசாரிகள் சங்கம் பாராட்டு
பல்லடம்: தஞ்சாவூரில் கோவில் அர்ச்சகர்களுக்கு, இஸ்லாமிய அறக்கட்டளையினர், நிவாரண உதவிகள் வழங்கியதற்கு, கோவில் பூசாரிகள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள கோவில் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பக்தர்கள் இன்றி பூஜைகள் மட்டுமே நடந்து வருவதால், அர்ச்சகர்கள் வருவாய் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். இச்சூழலில், தஞ்சாவூர் இஸ்லாமிய அறக்கட்டளை சார்பில், கோவில் அர்ச்சகர்களுக்கு, முஸ்லிம்கள் நிவாரண உதவி பொருட்கள் வழங்கினர். அதற்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கோவில் பூசாரிகள் நல சங்கத்தின் மாநில தலைவர் வாசு கூறியதாவது: ஊரடங்கு காரணமாக, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்கள் மூடப்பட்டதால், அர்ச்சகர்கள் போதிய வருவாய் இன்றி, குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்து அறநிலைத்துறை செய்யக்கூடிய பணியை, இஸ்லாமியர்கள் செய்தது வரவேற்கத்தக்கது. மூன்று வேளை தொழுகை நடத்தும் முஸ்லிம்களுக்கு, உதவும் எண்ணம் உள்ள நிலையில், மூன்று மாதத்துக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கையை எண்ணி எடுத்து செல்லும் அறநிலைத்துறைக்கு அந்த எண்ணம் வராதது வருத்தத்துக்கு உரியது. கோவில் பூசாரிகளின் நிலை குறித்து, அறநிலைத்துறை கண்டுகொள்ளாமல் இருப்பது, வேதனையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.