திருப்பதி தேவஸ்தான இணையத்தில் ஸ்லோகங்கள்
  திருப்பதி:திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் உள்ள, தியான ஸ்லோகங்களை, பக்தர்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம், யோக வாசிஷ்டம் என்ற பெயரில், திருமலையில் உள்ள நாதநீராஞ்ஜன மண்டபத்தில், தினசரி காலை, 7:௦௦ மணிக்கு, வால்மீகி மகரிஷி இயற்றிய, தன்வந்திரி ஸ்லோக பாராயணத்தை செய்து வருகிறது. இந்த ஸ்லோக பாராயணத்தால், கொரோனா நோய் தொற்று பரவுவது குறைந்து, உலகம் சுபிட்ஷமாக இருக்கும் என்பதால், தேவஸ்தானம் இதை செய்து வருகிறது.தேவஸ்தான தொலைக்காட்சி வாயிலாக, இந்த நிகழ்ச்சியை, அதிகாரிகள் ஒளிபரப்பி வருகின்றனர். இதற்கு பக்தர்களிடமிருந்து நல்ல வரவேற்பு உள்ளது. எனவே, தனியாக பாராயணம் செய்ய விரும்பும் பக்தர்களின் வசதிக்காக, தேவஸ்தானம் இந்த ஸ்லோகங்களை, www.tirumala.org மற்றும், www.svbcttd.com என்ற, இணையதளங்களில் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்லோகத்தை பக்தர்கள் பதிவிறக்கம் செய்து, பாராயணம் செய்யலாம் என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.