கோவில் அர்ச்சகர்களுக்கு நிவாரணம்: துணை சபாநாயகர் வழங்கினார்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனையடுத்து, பொள்ளாச்சி தொகுதி ஏழை, எளிய மக்களுக்கு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மூலமாக, மளிகை பொருட்கள் வினியோகிக்கப்பட்டது. தொடர்ச்சியாக, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் முன், அர்ச்சகர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், 200 பேருக்கு, பொருட்களை வழங்கினார்.
கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டன.மகளிர் குழுக்களுக்கு கடன் அனுமதிபொள்ளாச்சி தொகுதியில் ராமநாதபுரம், திம்மங்குத்து, எஸ். நாகூர், கோவிந்தனுார், வடக்கிப்பாளையம், குள்ளக்காபாளையம் ஆகிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் மூலமாக, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு, தலா ஒரு லட்சம் வீதம், 14 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, சிறப்பு கடன் அனுமதி ஆணைகளை துணை சபாநாயகர் வழங்கினார். மேலும், வடக்கிப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலமாக, 3 நபர்களுக்கு, தலா, 3 லட்சம் வீதம் வட்டியில்லா விவசாய பயிர்க்கடன் ஆணைகள் வழங்கப்பட்டன. முன்னாள் அமைச்சர் தாமோதரன், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் செல்வராஜா, தாசில்தார் தணிகைவேல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.