உடுமலை கோவில்களில் வைகாசி விசாக அபிஷேகம்
உடுமலை, சுற்றுப்பகுதி முருகன் கோவில்களில், வைகாசி விசாகம் சிறப்பு வழிபாட்டு பூஜை நடந்தது. வைகாசி விசாகம் முருகபெருமானுக்கு உகந்த நாளாகும். இந்நாளில், பக்தர்கள், குழந்தைபேறு, தீராத நோய் பிரச்னைகளை தீர்த்து வைக்கவும், விரதமிருந்து, சுப்ரமணிய சுவாமிகளுக்கு பிடித்தமான, அப்பம், சித்தரன்னங்கள், பானகம், மோர், தயிர்சாதம் மற்றும் பழங்கள், இனிப்புகள் வைத்து வழிபடுகின்றனர்.
கோவில்களுக்கு சென்று, பல்வேறு அபிஷேகங்கள் செய்தும், நேர்த்திகடன்களை பூர்த்தி செய்கின்றனர். தற்போது, கொரோனா ஊரடங்கு இருப்பதால், பக்தர்கள் வீட்டிலேயே, சிறப்பு பூஜை செய்து, பிரசாதம் படைத்தும் வழிபட்டனர்.பிரசன்ன விநாயகர் கோவிலில், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, பால், பன்னீர், சந்தனம் உட்பட பல்வேறு திரவியங்களில், அபிேஷகம் நடந்தது. வள்ளி தெய்வானை சமேதமாக, சிறப்பு அலங்காரத்துடன் சுப்ரமணிய சுவாமிகளுக்கு தீபாராதனை நடந்தது.ருத்தரப்ப நகர், சித்தி விநாயகர் கோவில் பாலமுருகன் சுவாமிகளுக்கு, சந்தனம், பால் உட்பட பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.
வால்பாறை வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி விசாக வழிபாடு, நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. காலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், காலை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. வால்பாறை அண்ணாநகர் முத்துமாரியம்மன், வாழைத்தோட்டம் எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன், வாழைத்தோட்டம் ஐயப்பசுவாமி, காமாட்சியம்மன் உள்ளிட்ட கோவில்களிலும், வைகாசி விசாக வழிபாடு நடந்தது. கோவில்களில் நேற்று, பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், கோவிலில் அர்ச்சகர்கள் மட்டும் சிறப்பு பூஜையில் பங்கேற்கின்றனர். - நிருபர் குழு -