திருமலை திருப்பதியில் ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம்; பக்தர்கள் பரவசம்
ADDED :10 hours ago
திருப்பதி: திருமலையில், கார்த்திகை திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு புஷ்ப யாகம் நடந்தது.
திருமலை ஏழுமலையானுக்கு, கார்த்திகை மாத (தெலுங்கு காலண்டரின் படி) திருவோண நட்சத்திரத்தன்று, ஆண்டு புஷ்ப யாகத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, இன்று திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, புஷ்ப யாகம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு, உற்சவ மூர்த்திகளுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. பின், மதியம், 1:00 மணி முதல் மாலை, 5:00 வரை, சாமந்தி, தாமரை, மல்லிகை உள்ளிட்ட மலர்கள்; துளசி, கதிர்பச்சை உள்ளிட்ட இலைகளால் புஷ்ப யாகம் நடத்தப்பட்டது. இதற்காக, தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து, 7 டன் மலர்கள், இலைகள் கொண்டு வரப்பட்டன. புஷ்ப யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவச தரிசனம் செய்தனர்.