உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவராத்திரி விழா விமரிசை; காஞ்சிபுரத்தில் பக்தர்கள் தரிசனம்

சிவராத்திரி விழா விமரிசை; காஞ்சிபுரத்தில் பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: மஹா சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று நான்கு கால சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலில் பிரதோஷ கால மஹா சங்கு அபிேஷகமும், ஏகாம்பரநாதர் கோவில், கச்சபேஸ்வரர் கோவிலில் நான்கு கால பூஜை நடந்தது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் சிவராத்திரியையொட்டி மகா ஸ்வாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்திற்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. உக்கம்பெரும்பாக்கம் நட்சத்திர விருட்ச விநாயகர் கோவிலில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் வழங்கிய, ருத்ராட்ச லிங்கத்திற்கு சிவராத்திரி சிறப்பு பூஜை நடந்தது.

காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு சொந்தமான வேடல் கிராமம், கடிகாஸ்தானத்தில் உள்ள 60 அடி உயர சிவன் சிலை, 40 அடி உயரத்தில் உள்ள நந்தி சிலைகளுக்கு, சிறப்பு பூஜை நடந்தது. கடிகாஸ்தானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஆன்மிக கண்காட்சியை பக்தர்கள் பார்வையிட்டனர்.

காஞ்சிபுரம் வெள்ளகுளம் காமாட்சியம்பாளும், சந்திரேஸ்வரரும், ஏலவார் குழலி சமேத ஏகாம்பராதர் அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.

திருக்காலிமேடு சத்யநாதசுவாமி, பிரமாம்பிகையுடன், ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்தார்.

காஞ்சிபுரம் மதங்கீஸ்வரர், மாதண்ணம், கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர், கிளார் அகத்தீஸ்வரர், பிள்ளையார்பாளையம் ருத்ரகோடீஸ்வரர், வில்வநாத ஈஸ்வரர், சர்வதீர்த்தம் அனுமந்தீஸ்வரர், யோக லிங்கேஸ்வரர், மேலச்சேரி வேதபுரீஸ்வரர் உள்ளிட்ட கோவில்களில் நேற்று நான்கு கால பூஜைகள் நடந்தன.

ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரம் அருகே சந்தவேலுார் கிராமத்தில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 45ம் ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று நடந்தது.

காலை சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனை நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, பூந்தேர் இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !