உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்தியே மிகப்பெரிய செல்வம்

திருப்தியே மிகப்பெரிய செல்வம்

தெளிவுபடுத்துகிறார் புத்தர்

* நோயற்ற வாழ்வே பெரிய பாக்கியம். திருப்தியே மிகப் பெரிய செல்வம். நம்பிக்கைக்கு உரியவரே நல்ல உறவினர்.
* உலகத்தை அறியும் முன் மனிதன் தன்னை அறிய வேண்டும். அந்நிலையில் வெற்றி, தோல்வி எது வந்தாலும் யாருக்கும் தலை வணங்காமல் வாழ முடியும்.
* பாவத்தின் திறவுகோல் ஆசை. ஞானத்தின் திறவுகோல் அன்பு.
* மனதின் பிரச்னைகளை அறிந்து கொள்ளவும், சரி செய்யவும் தியானமே வழி.
* புயலால் அசைக்க முடியாத பாறை போல, புகழ்ச்சி, இகழ்ச்சிக்கு அசையாதவனே அறிஞன்.
* ஆசையை ஒழித்தால்,  தாமரை இலை தண்ணீர் போல துன்பம் மனிதனை தீண்டுவதில்லை.  
* எளிமையாகவும், கண்ணியமாகவும் இருப்பது தான் பண்பட்ட மனிதனின் அடையாளம்.
* தடைகள் இல்லாவிட்டால் மனம் நிதானத்தை இழந்து அகந்தைக்கு ஆளாக நேரிடும்.
* உடல், நாக்கு, மனம் மூன்றையும் அடக்கியாள்பவனே உண்மையான அடக்கம் கொண்டவன்.              
* ஒருவனுக்கு வரும் நன்மைக்கும் தீமைக்கும் அவனவன் செயல்களே காரணம்.      
* அன்பே உலகின் மகாசக்தி. இதை அறிந்தவன் வாழ்வே அர்த்தம் நிறைந்ததாக இருக்கும்.
* அடக்கம் இன்றி நுாறு ஆண்டு வாழ்வதைக் காட்டிலும், ஒழுக்கமுடன் ஒருநாள் வாழ்வது சிறப்பு.
* உதடுகள் அரண்மனைக்கதவு போல பாதுகாப்பாக இருக்க வேண்டும். வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் அமைதியை தருவதாக இருக்க வேண்டும்.
*  மலர்களின் மணம் காற்றடிக்கும் திசையெல்லாம் பரவும். ஆனால் நல்லோரின் புகழ் நாலாபுறங்களிலும் பரவும்.
* பொறாமை, பேராசை, தீய ஒழுக்கம் கொண்டவர்கள் உடல் அழகாலும், பேச்சாலும் மட்டும் நல்லவர்களாகி விட முடியாது.
* பிறருக்கு கொடுப்பதே உண்மையான இன்பம். அதுவே ஆன்மிக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
* உங்களுடைய வார்த்தைகளைக் கொண்டு ஒருவரை மற்றொருவருக்கு எதிராகத் திருப்புவது நல்லதல்ல. உங்களின் பேச்சு சமாதானத்திற்கு துணை நிற்கட்டும்.
* பொய்யை உண்மையாக திரித்து கூறி பிறர் மனம் நோகும் விதத்திலும் பேச வேண்டாம்.
* தோன்றிய அனைத்தும் ஒருநாள் அழியும். இது குறித்து கவலைப்படுவது அறிவுடைமையாகாது.
* துன்பத்தின் தன்மை அறிந்து அதை ஒழிக்கும் வழியை காண்பவரே நல்ல அறிஞர்.
*  தீமைகளில் இருந்து விடுவிப்பதோடு, நன்மை அளிக்கும் உண்மையை பரப்ப உறுதி கொள்ளுங்கள்.
* மூடத்தனமான சடங்குங்களில் நம்பிக்கை வேண்டாம். நல்லொழுக்கம், நற்பண்புகள் மட்டுமே வாழ்வை மேம்படுத்தும்.
* விழிப்புடன் செயல்படுங்கள். சுமைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
* உணர்வுடன் இருப்பதோடு அதிலிருந்து விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.
* நல்லவர்கள் இமயமலை போல தொலைவில் இருந்தே காண்போருக்கு மகிழ்ச்சியளிப்பர். தீயவர்களோ இருளில் எய்த அம்பு போல இருக்கும் இடம் தெரியாமல் மறைவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !