இது தான் ‘குரங்கு புத்தி’
ADDED :1952 days ago
மகான் ரமணர் திருவண்ணாமலை ஆஸ்ரமத்தில் பக்தர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது வெளிநாட்டுக்காரர் ஒருவர் வந்தார். தரையில் அவர் உட்கார முயற்சித்தார். ஆனால் காலை மடக்க முடியவில்லை. எனவே, ஒரு நாற்காலியைத் துாக்கி வந்து அதில் உட்கார்ந்தார். உபதேசம் செய்யும் குருநாதர் கீழேயும், பக்தர்கள் ஆசனத்திலும் உட்காரக் கூடாது என்பதை வெளிநாட்டுக்காரர் அறிந்திருக்க நியாயமில்லை. அதைக் கண்ட ஆஸ்ரம நிர்வாகி, கீழே அமரும்படி தெரிவித்தார். அவரோ தனது இயலாமையைச் சொல்லி வருந்தினார். அப்படியானால் இடத்தை விட்டு வெளியேறும்படி நிர்வாகி கேட்டுக் கொண்டார். வெளிநாட்டுக்காரரும் வருத்தமுடன் புறப்பட்டார். அப்போது ரமணர், ‘‘என்னப்பா ஆச்சு?’’ எனக் கேட்டார்.
ரமணர் அங்கிருந்த மரத்தை அண்ணாந்தபடி, ‘‘இதோ இந்த மரத்து போல குரங்கு உட்கார்ந்திருக்கு பார்! அதுவும் என்னை விட உசரமான இடத்தில தான் உட்கார்ந்திருக்கு! அதையும் வெளியில் அனுப்பி விடுவோமா?’’ என்றார்.
அமைதியுடன் நின்றார் நிர்வாகி. ‘‘இதோ பார்! உலகில் உசத்தி, தாழ்ச்சி என்று யாருமில்லை. அவரைக் கூப்பிட்டு உட்காரச் சொல்’’ என்றார். குரங்கால் தனக்கு புத்தி கிடைத்ததை எண்ணி நிர்வாகியும் அமைதி அடைந்தார்.