உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நரசிம்மர் அருளால் நலமுடன் வாழ்க

நரசிம்மர் அருளால் நலமுடன் வாழ்க

திருப்பூர் கிருஷ்ணன்

காஞ்சிப்பெரியவரின் தீவிர பக்தராக இருந்தார் ஒரு அன்பர்.  மகாசுவாமிகளை வணங்காமல் எந்தச் செயலையும் செய்ய மாட்டார். சுவாமிகளே அவருக்கு கண் கண்ட தெய்வம்.
நீண்ட காலமாக பிள்ளை இல்லாமல் தவித்த அவருக்கு நல்ல காலம் பிறந்தது. மனைவி கருவுற்றாள். குழந்தை  நல்ல படியாகப் பிறக்க வேண்டும் என்று சுவாமிகளைப் பிரார்த்தித்தார்.
மனைவியைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்து வந்தார். குழந்தை பிறந்ததும் மகாசுவாமிகளிடம் குழந்தைக்கு பெயர்சூட்ட வேண்டும் என வேண்டிக் கொண்டார். வளைகாப்பு வைபவம் சிறப்பாக நிறைவேறியது.
தாய் வீ்ட்டுக்குப் புறப்பட்டாள் மனைவி. அன்றிரவு களைப்பால் சீக்கிரம் கண் அயர்ந்தாள். அதிகாலையில் அவளின் கனவில் நரசிம்ம சுவாமி ஒளிவீசும் முகத்துடன் தோன்றினார். ‘‘உனக்கு ஆண்குழந்தை பிறக்கும். ‘நரசிம்மன்’ என்று பெயரிடு’ என்று உத்தரவிட்டார்.  
கண் விழித்த அப்பெண்ணுக்கு துாக்கம் வரவில்லை. கணவரிடம் கனவை விவரித்தாள். சிந்தனையில் ஆழ்ந்த கணவர், ‘‘நரசிம்மர் இட்ட உத்தரவை நிறைவேற்றாவிட்டால் தெய்வ குற்றம் நேருமே... வேண்டுதல்படியே மகாசுவாமிகளிடம் குழந்தைக்குப் பெயர் சூட்டச் சொல்வதா?’’ என்ற குழப்பம் ஏற்பட்டது.
குழந்தை பிறந்த பிறகு என்ன செய்யலாம் என யோசிப்போம் என்று  பிரச்னையை அப்போதைக்கு அவர்கள் ஒத்தி வைத்தனர்.
இரண்டு மாதம் கழித்து ஆண் குழந்தை பிறந்தது. தங்களின் வேண்டுதல்படி குழந்தையுடன் காஞ்சிபுரம் சென்றனர்.  சுவாமிகளின் முன் குழந்தையைக் கிடத்தி வணங்கினர். குழந்தையை அருள் பொங்க பார்த்தார் சுவாமிகள்.
கனவில் தோன்றி நரசிம்மர் இட்ட கட்டளையை சொல்லலாம் என மனைவி வாய் திறந்தாள். ஆனால் குறுக்கிட்ட சுவாமிகள்,  ‘‘இது ஆண் குழந்தை தானே?’’ எனக் கேட்டார்.
அவளும் தலையசைத்தாள்.
‘‘பக்த பிரகலாதனுக்கு அருள்புரிந்த மகாவிஷ்ணுவின் அவதாரமான ‘நரசிம்மா’ என்று வாய் நிறையக் கூப்பிடுங்கள். இவன் அவர் அருளால் நலமாக வாழ்வான்’’ என ஆசியளித்தார். சுவாமிகளின் தீர்க்க தரிசனத்தைக் கண்ட தம்பதி கைகூப்பி நின்றனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !