2,300 ஆண்டு பழமையான ஊது உலை
உடுமலை:திருப்பூர் அருகே, நொய்யல் கரையில் அமைந்துள்ள கொடுமணல் அகழாய்வில், கனிமங்கள் உருக்கு தொழிற்சாலைக்கான ஊது உலை கட்டமைப்பு, தமிழ்ப்பிராமி எழுத்துடன் கூடிய ஓடு என, பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.
திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில், உள்ள கொடுமணலில், பழமையான வாழ்விடம், பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ளன. இங்கு, எட்டாவது கட்டமாக, தமிழக தொல்லியல் துறையால், அகழாய்வு பணிகள், நடந்து வருகின்றன. கொடுமணல் அகழாய்வு திட்டப்பணி இயக்குனர் ரஞ்சித் கூறியதாவது:இந்த ஆய்வில், 2,300 ஆண்டு பழமையான, தொல் பொருட்கள் ஆயிரக்கணக்கில் கிடைத்துள்ளன. மேலும், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஐந்து நாணயங்கள், தங்கம், தாமிரம், கல்மணிகள், ஆபரண உற்பத்தி தொழிற்சாலை ஆகியவற்றை பார்க்கையில், மேலை நாடுகளுடன் வணிக தொடர்பு உறுதியாகி உள்ளது.முக்கியமாக, கனிமங்களை உருக்கி, கருவிகள், ஆபரணங்கள் உற்பத்தி செய்ததற்கான, சுடுமண் அடுப்பு, சுவர் மற்றும் ஊது உலை எனப்படும் கொல்லு பட்டறை அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதுவரை கிடைக்காத பெயராக, அகூரவன் என்ற தமிழ் பிராமி எழுத்து ஓடு கிடைத்துள்ளது. இது ஒரு இனக்குழு தலைவர் பெயராக இருக்கலாம். அணிகலன் துண்டுகள், வண்ண கல் மணிகள், சங்கு வளையல்கள் மற்றும் விலங்கினங்களின் தலை, எலும்பு கூடுகளும் கிடைத்து வருகின்றன.முற்றத்துடன் கூடிய இரு கல் அறைகளுடன் இறந்தவர்களுக்கான வீடு, இடுதுளை, குத்துக்கல் என சிறப்பான கட்டமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஈமச்சின்னம் உள்ள பகுதியில், ஆறு சுடுமண் ஜாடிகள், சூது பவளம் என கிடைத்து வருகிறது.இவ்வாறு, அவர் கூறினர்.