உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதலில் சாப்பிடு! பிறகு பேசலாம்!

முதலில் சாப்பிடு! பிறகு பேசலாம்!


 மகாசுவாமிகளின் பக்தர் ஒருவர் வெளிநாட்டில் இருந்தார். தினமும் சுவாமிகளை வழிபட்ட பின்னரே அன்றாடப்பணிகளை கவனிப்பார். அவர் ஒருமுறை இந்தியாவுக்கு வரும் வாய்ப்பு கிடைத்தது. பயணத்தின் போது சுவாமிகளை தரிசித்த பிறகே பணிகளில் ஈடுபட வேண்டும் என உறுதி கொண்டார்.
அந்த எண்ணம் நிலையாக இருக்க வேண்டும் என யோசித்தார். அதற்கும் ஒரு உத்தியைக் கண்டுபிடித்தது அவரது மனம்.
விமான நிலையத்திற்கு வந்ததில் இருந்து எதையும் அவர் சாப்பிடவில்லை. பல மணிநேர விமானப் பயணம். என்றாலும் சுவாமிகளின் திருநாமத்தை ஜபித்தபடியே இருந்தார். சுவாமிகளை தரிசித்த பின்னரே ‘தண்ணீர் கூட குடிப்பேன்’ என கட்டுப்பாடுடன் இருந்தார்.
சென்னையில் விமானம் தரையிறங்கியதும் வாடகைக் காரில் காஞ்சிபுரம் புறப்பட்டார்.
அப்போது இரவு பத்து மணி இருக்கும்.
மடத்தில் உறங்கப் போன சமையல்காரரை அழைத்தார் மகாசுவாமிகள்.
‘ரவை இருக்கிறதா?’ எனக் கேட்டார்.
‘‘இருக்கிறது சுவாமி’’ என்றார் அவர்.
‘‘கொஞ்சம் உப்புமா கிண்டு. ஒருவர் தாராளமா சாப்பிட்டுப் பசியாறும் அளவு உப்புமா இருக்கணும். தொட்டுக்கொள்ள பொட்டுக்கடலைச் சட்னி அல்லது தக்காளிச் சட்னி தயார் செய். அரைமணி நேரத்தில் தயாரானால் நல்லது!’’ என்றார் சுவாமிகள்.
சமையல்காரருக்கு ஆச்சர்யம்.
‘இப்படியெல்லாம் கேட்டு வாங்கிச் சாப்பிட்ட மாட்டாரே? அதுவும் ராத்திரி பத்து மணிக்கு உப்புமா கேட்கிறாரே? விருப்பப்பட்டு கேட்பதால் நல்ல ருசியாக செய்யணும்’ என சிந்தித்தபடி உப்புமா தயாரித்தார்.  
‘‘சாப்பிட உப்புமா கொண்டு வரலாமா?’’ என சுவாமியிடம் ஆவலுடன் கேட்டார்.
கலகல என சிரித்த சுவாமிகள் ‘கொஞ்சம் காத்திரு!` என்றார்.
அதற்குள் சென்னையிலிருந்து கிளம்பிய வாடகைக்கார் காஞ்சிபுரம் வந்தது. ஸ்ரீமடத்திற்கு வந்த பக்தர் சுவாமிகளை தரிசித்து அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார். தழுதழுத்த குரலில் பேச முயற்சித்தார்.
‘‘பேச்செல்லாம் அப்புறம். சாப்பிடாமல் என்னைப் பார்க்க வந்திருக்க! முதலில் சாப்பிட்டு பசியாறு. பிறகு பேசலாம்’’ என்றார்
சமையல்காரரிடம், ‘‘இவருக்குத்தான் உப்புமா செய்யச் சொன்னேன். இப்போது நீ பரிமாறலாம்’’ என்றார் சுவாமிகள். அதைக் கேட்டதும் வெளிநாட்டு பக்தருக்கு ஆனந்தக் கண்ணீர் பெருகியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !