கந்த சஷ்டி சர்ச்சை பேச்சு: சாது மிரண்டால் காடு கொள்ளாது
மதுரை : தேவராய சுவாமிகள் அருளிய, கந்தர் சஷ்டி கவசம் குறித்து, யு டியூப் சமூக வலைதளத்தில் இழிவாக பேசியவர், சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது புரிந்து, மன்னிப்பு கேட்க வேண்டும் என, தமிழக தர்மரக்சன சமிதி தலைவர் ஓங்காரானந்தா, சுவாமி சிவயோகானந்தா உள்ளிட்ட ஆன்மிகவாதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சுவாமி ஒங்காரானந்தா கூறியதாவது: கந்தர் சஷ்டி கவசத்தை ஏன் இழிவாக பேசினர் எனத் தெரியவில்லை. கந்தர் சஷ்டி கவசத்தை பக்தியுடன் பாடுவோருக்கு மன நிம்மதி கிடைக்கும். நம் சாஸ்திரப்படி, நம் உறுப்புகள் உயர்ந்தவை. அந்த வகையில், பால் தரும் தாயின் மார்பகம் தெய்வீகம். மதங்களின் நம்பிக்கையை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். உடல், உடை கறுப்பாக இருக்கலாம். ஆனால், உள்ளம் கறுப்பாக இருக்கக் கூடாது. கந்தர் சஷ்டி கவசத்தை இழிவாக பேசியவர் மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என புரிந்து, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
எழுச்சியை ஏற்படுத்தும் : மதுரை சின்மயா மிஷன், சுவாமி சிவயோகானந்தா கூறியதாவது: சமீபகாலமாக ஹிந்து கடவுள், நுால்களை இழிவாக பேசி, சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். கந்தர் சஷ்டி கவசம் குறித்து இழிவாக பேசுவதால், ஹிந்துக்களின் நம்பிக்கை சிதையாது; ஹிந்துக்களிடம் ஒற்றுமை, எழுச்சியை ஏற்படுத்தும். கந்தர் சஷ்டி கவசம் போல, பாம்பன் சுவாமிகளின் சண்முக கவசத்தை பாடுவது உடல், மனதிற்கு மாமருந்து. இழிவாக பேசுபவர்கள் பின்னணி குறித்து கண்டறிந்து, மீண்டும் பேசாமல் தடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
ஸ்ரீவில்லிபுத்துார் சடகோபராமானுஜ ஜீயர் கூறியதாவது: சமீபகாலமாக, ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை, பதிவுகளை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, சர்ச்சையை ஏற்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. முருக பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும், கந்தசஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய செயல் கண்டிக்கத்தக்கது. இது, முருக பக்தர்களை மட்டுமின்றி, அனைத்து ஹிந்து மக்களின் மனதையும் காயப்படுத்துவதாக உள்ளது. மத துவேஷ கருத்துகளை பதிவிட்டு சர்ச்சைகளை உருவாக்குபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர்கள் கொதிப்பு: கந்தசஷ்டி கவசம் பற்றிய அவதுாறுக்கு நடிகர்கள் நட்ராஜ், பிரசன்னா பதிலடி கொடுத்துள்ளனர். நடிகர் நட்டி நட்ராஜ் டுவிட்டரில் கூறுகையில் போங்கடா முட்டாள்களா... முருகனை பற்றி சொல்ல சிவனாலேயே முடியாது. என் ஜபம் கந்தசஷ்டி கவசம் என்னை காக்கும். சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை. சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் இல்லை என கூறியுள்ளார்.
நடிகர் பிரசன்னா கூறியுள்ளதாவது: யாரும் யாருடைய நம்பிக்கையையும் ஓரளவு கடந்து விமர்சிக்கிறேன் என கொச்சைப்படுத்துவது பெரிதாக பேசப்படும் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. அவரை ஏன் கேட்பதில்லை என்ற வாதமும் பயன் தராது. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு பெரிது.அதை மதிக்க தெரியாத போக்கிரிகள் யாராகினும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும். மதச் சார்பின்மையில் நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில் மத நம்பிக்கையினும் அதி முக்கியம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.