உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனகனந்தலில் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டதா?

தனகனந்தலில் சுவாமி சிலை கண்டெடுக்கப்பட்டதா?

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த தனகனந்தல் கிராமத்தில் சுவாமி சிலை பூமியிலிருந்து கிடைத்ததாக கூறி மக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருக்கோவிலூர் அடுத்த தனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவர் நேற்று மாலை கிராமத்திலுள்ள ஏரியின் உபரி நீர் வெளியேறும் கலுங்கல் பகுதியை ஒட்டியுள்ள ஏரிக்கரையில் மாரியம்மன் சிலை இருப்பதாக அருள்வாக்கு கூறியதாக தெரிகிறது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அவர் காட்டிய இடத்தை தோண்டிய போது அம்மன், முருகர், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் ஓரடி ஆழத்தில் எடுக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. காலை இந்த சிலைகளை ஏற்கனவே மாரியம்மன் சிலை வைக்கப்பட்டு வழிபட்டு வந்த இடத்திலேயே வைத்து பூஜை செய்து வழிபட தொடங்கினர். தகவலறிந்த திருக்கோவிலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, சமீபத்தில் வடிவமைக்கப்பட்ட சிலையாக இருந்ததால், வழிபாட்டிலிருந்து பூமியில் புதைந்த பழமையான சிலை இல்லை என்பதை அறிந்து இது பற்றிய தகவலை வருவாய்த்துறைக்கு தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !