உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம் நேற்று, கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொரோனா ஊரடங்கால், கடந்த மார்ச், 25 முதல், அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படாத நிலையில், சிவாச்சாரியார்களை கொண்டு வழக்கமாக சுவாமிக்கு, தினசரி ஆறு கால பூஜை நடந்து வருகிறது. இந்நிலையில்,  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர உற்சவம் நேற்று முன்தினம் மாலை, விநாயகர் யாகசாலை பூஜை வழிபாட்டுடன் தொடங்கியது. நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூலவர்  மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு, சிறப்பு அபி ஷேகம், பூஜைகள் நடந்தன. பின்னர், அம்மன் சன்னதி முன்புள்ள, 60 அடி உயர தங்க கொடி மரம் அருகே, பராசக்தி அம்மன், விநாயகர் அலங்கார ரூபத்தில் எழுந்தருள, காலை, 6:30 மணிக்கு கடக லக்னத்தில்,  சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து, மாலை அம்மனுக்கு வளைகாப்பு நடந்தது. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. விழாவில், தொடர்ந்து, 10 நாட்கள் கோவில் வளாகத்தில் அம்மன் வலம் வருவார். நிறைவு நாளன்று,  கோவில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தில், பராசக்தி அம்மன் தீர்த்தவாரியும், பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !