சிவன்மலை முருகன் கோவிலில் விதிமீறி போலீஸ் ஐ.ஜி., தரிசனம்
ADDED :1897 days ago
காங்கேயம், சிவன்மலை கோவிலில், ஊரடங்கு விதிமீறி, தென்மண்டல ஐ.ஜி., சுவாமி தரிசனம் செய்தது, சர்ச்சையை உருவாக்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசுவாமி கோவில், தமிழக அளவில் பிரசித்தி பெற்றதாக உள்ளது. சிவவாக்கிய சித்தர் அருள்பெற்ற தலமாகவும், விநாயக பெருமான் முருகனை வணங்கும் தலமாகவும் விளங்குகிறது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக, கோவில் மூடப்பட்டுள்ளது. வழக்கமான பூஜை மட்டுமே நடக்கிறது. இந்நிலையில் தென் மண்டல போலீஸ் ஐ.ஜி., முருகன், சிவன்மலை கோவிலுக்கு, நேற்று மதியம், 1:00 மணியளவில் வந்து, தரிசனம் செய்தார். கோவிலில் உள்ள உத்தரவு பெட்டி குறித்தும், விபரம் கேட்டறிந்தார். கொரோனா ஊரடங்கு விதிமீறி, போலீஸ் ஐ.ஜி.,யை தரிசனம் செய்ய, கோவில் நிர்வாகம் அனுமதித்தது, பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.