சென்னிமலை முருகன் கோவிலில் 5 மாதமாக பவுர்ணமி கிரிவலம் ரத்து
ADDED :1990 days ago
சென்னிமலை: முருகன் கோவிலில், ஐந்து மாதங்களாக பவுர்ணமி கிரிவலம் நடைபெறவில்லை. கடந்த பங்குனி உத்திர தினத்தன்று, சென்னிமலை முருகன் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அப்போது கொரோனா பரவுதலை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், பவுர்ணமி கிரிவலம் நடைபெறவில்லை. அதன் பிறகு, தமிழ் புத்தாண்டு பிறந்த மாதமான, சித்திரை மாத பவுர்ணமி தினத்தன்றும், ஊரடங்கு அமலில் இருந்ததால் கிரிவலம் ரத்து செய்யப்பட்டது. தற்போது வரை, மத வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி இல்லாததால், நேற்று சென்னிமலையில் நடைபெற இருந்த, ஆடி பவுர்ணமி கிரிவலமும் நடைபெறவில்லை. தொடர்ந்து ஐந்து மாதங்களாக, கிரிவலம் நடைபெறாத நிலையில், அடுத்த (ஆவணி) மாதத்திற்குள் வழிபாட்டு தலங்களை திறக்க, அரசு அனுமதி அளிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.