காளியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
உடுமலை: உடுமலை கல்பனா ரோட்டில், பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 1999ம் ஆண்டு நடந்தது. 11 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள இந்துசமய அறநிலையத்துறை ஆணையரிடம் உரிய அனுமதி பெறப்பட்டது. இதனையடுத்து, கடந்த 2010ம் ஆண்டு செப்.,4ம் தேதி பாலாலயம் நடந்தது. பின், கோவில் புனரமைப்பு பணிகள், மகாமண்டபம், அம்மன் சன்னதிக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளதால், கும்பாபிஷேக விழா இன்று (16ம் தேதி) நடக்கிறது. கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் காலை 6.15 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, காலை 9.15 மணிக்கு மகா கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதியும்; மாலை 4.15 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து இரண்டு கால யாக பூஜையும் நடந்தது. நேற்று காலை 11.00 மணிக்கு அம்மன் சிலை கண் திறப்பு, சயனாதிவாசம், கோபுர கலச ஸ்தாபிதம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது.இன்று அதிகாலை 4.15 மணிக்கு நான்காம் கால யாக வேள்வி, காலை 6.00 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடு; காலை 6.30 மணிக்கு காளியம்மன் விமானம் கும்பாபிஷேகம், காலை 7.00 மணிக்கு காளியம்மன், விநாயகர், சுப்ரமணியர், நவக்கிரகங்கள், கருப்பராயசுவாமி மூலவர் கும்பாபிஷேகம்; காலை 10.00 மணிக்கு மகாபிஷேகம், தசதானம், தச தரிசனம், ÷ஷாடச உபசாரம் உள்ளிட்ட பூஜைகளும் நடக்கின்றன.