காரமடை அரங்கநாதர் கோயிலில் 30ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோயிலில், வருகிற, 30ம் தேதி வைகுண்ட ஏகாதசி என்னும், சொர்க்க வாசல் திறப்பு நடைபெற உள்ளது.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோயில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பு விழா, வெகு விமரிசையாக நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பகல் பத்து உற்சாகம், கடந்த, 20ம் தேதி துவங்கியது. வருகிற, 29ம் தேதி இரவு நாச்சியார் திருக்கோலத்தில், அரங்கநாதர் பெருமாள் எழுந்தருள உள்ளார். அதைத் தொடர்ந்து, 30ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு வைகுண்ட ஏகாதேசி என்னும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெற உள்ளது. அன்று இரவு, 11:00 மணிக்கு திருவாய்மொழி திருநாள் என்னும் ராபத்து உற்சவம் துவங்க உள்ளது. ஜனவரி 6ம் தேதி குதிரை வாகனத்தில் திருமங்கை மன்னன் வேடுபரியும், எட்டாம் தேதி திருவாய் மொழித் திருநாள் சாற்று முறை உற்சவம் பூர்த்தியும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பேபி ஷாலினி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.