சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை : பம்பையில் வெள்ளப்பெருக்கு
சபரிமலை:சபரிமலையில் நிறைபுத்தரிசி பூஜை நிறைவு பெற்று நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடை திறந்தார். தொடர்ந்து தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிேஷகம், கணபதிேஹாமம் நடத்தினார்.
நிறைபுத்தரிசி பூஜைக்காக தேவசம்போர்டு வயல்களில் அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்கள் சன்னிதானம் கொண்டு வரப்பட்டது. 5:30 மணிக்கு மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி மற்றும் பூஜாரிகள் அதை தலையில் சுமந்து சன்னதிக்கு கொண்டு வந்தனர். பூஜைக்குப்பின் நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.அத்தாழபூஜைக்குப்பின் இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. ஆவணி மாத பூஜைகளுக்காக ஆக. 16 மாலை 5:00 மணிக்கு நடை திறக்கும்.பலத்த மழை காரணமாக சபரிமலை செல்லும் பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. சாலக்காயம் அருகே ஏற்பட்ட மண்சரிவை அகற்ற ஐந்து மணி நேரம் ஆனது. பம்பை நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சில இடங்களில் ரோடுகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அணைகள் திறக்கப்பட்டால் பம்பையில் முன்பு போல பேரழிவு ஏற்படும் சூழல் உள்ளது.