விற்பனை ஆகாத விநாயகர் சிலைகள்
ஓசூர்; விநாயகர் சதுர்த்திக்காக தயாரிக்கப்பட்ட சிலைகள், கொரோனாவால் விற்பனையாகாமல் உள்ளன. இதனால், வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.
நாடு முழுதும், ஆண்டுதோறும், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படும். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரத்தில், ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், 1,000த்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விழா முடிந்ததும், நீர்நிலைகளில் கரைக்கப்படும். இதற்காக, நீர்நிலைகளுக்கு மாசு ஏற்படுத்தாத மரவள்ளிக் கிழங்கில், விநாயகர் சிலைகள் அதிகளவில் தயாரிக்கப்படும். வரும், 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிறது.ஆனால், நாடு முழுதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஹிந்து அமைப்புகள் முனைப்பு காட்டவில்லை. பொதுமக்களும், இதுவரை விநாயகர் சிலைகளை வாங்க முன்வரவில்லை. இதனால், வியாபாரிகள் கவலையில் உள்ளனர்.