சென்னையில் கோவில் திறக்கலாம்: பிரசாதம் கூடாது
சென்னை : சென்னையில், 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உள்ள, வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவலை தொடர்ந்து, வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து, 10 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான வருமானம் உள்ள, வழிபாட்டு தலங்களை திறக்க, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.தொடர்ந்து, சென்னையில் வழிபாட்டு தலங்களை திறப்பது தொடர்பான நெறிமுறைகளை, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: வழிபாட்டு தலங்களை தினமும், மூன்று முறை கிருமிநாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். நுழைவாயில்களில், கை கழுவுவதற்கான வசதியை ஏற்படுத்தவும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவும் வேண்டும்.பிரசாதம் வழங்க அனுமதி இல்லை. அனைத்து அலுவலர்களுக்கும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.
கோவில் திறக்கும் நேரம், மூடும் நேர விபரங்களை நுழைவாயிலில் வைக்க வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது, பேரிடம் மேலாண்மை சட்டத்தின்படி, நடவடிக்கை எடுக்கப்படும்.வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதியை பெற, www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதில், வழிபாட்டு தலம் அமைந்துள்ள வார்டு, மண்டலம், முகவரி, நிர்வாகியின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்ய வேண்டும். பெறப்பட்ட அனுமதியை, வழிபாட்டு தலங்களில், அனைவருக்கும் தெரியும்படி வைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.