உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெலுங்கானாவில் விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட முடிவு

தெலுங்கானாவில் விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட முடிவு

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே எளிமையாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாட வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அச்சுறுத்தல் காரணமாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதால் அனைத்து மாநிலங்களில் முக்கிய விழாக்களுக்கும் , பண்டிகைகளுக்கும் மக்கள் கூட தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் ஆக.,22 விநாயகர் சதுர்த்தி விழா நாடெங்கும் கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் வரை கொண்டாடப்படும். குறிப்பாக மஹாராஷ்டிராவில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். ஆனால் இம்முறை தொற்று பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் விதித்துள்ளன.

தெலுங்கானாவிலும் கொரோனா அச்சுறுத்தலால், விநாயகர் சதுர்த்தியை எளிமையாக கொண்டாட வேண்டும் என அரசு வலியுறுத்துகிறது. இது தொடர்பாக தெலுங்கானாவின் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் டி. சீனிவாஸ் யாதவ், இன்று பாக்யநகர் கணேஷ் உத்தவ் சமிதி அமைப்பு, போலீசார் மற்றும் பிற துறைகளை சேர்ந்த அதிகாரிகளை சந்தித்து, விழா நாட்களில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக யாதவ் கூறுகையில், தொற்று நோயின் நிலைமையை கருத்திற்கொண்டு, பக்தர்கள் மற்றும் இளைஞர் நல சங்கங்கள் விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து பாதுகாப்புடன் வழிபட வேண்டும். வைரஸ் பரவுவதில் தங்கள் ஒத்துழைப்பை விரிவுபடுத்த மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிப்பதன் மூலம் விநாயகர் சதுர்த்தி விழாக்களை சுமூகமாகவும், பாதுகாப்பாகவும் நடத்தப்படுவதை அரசாங்கம் உறுதி செய்கிறது. அனைத்து விநாயகர் கோவில்களிலும், பூஜைகள் மற்றும் சடங்குகளை வரம்புக்குள் பாரம்பரியப்படி, செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பொனாலு மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்கள் சிறப்பாக நடத்தப்படும். இதற்காக உத்தவ் சமிதி அமைப்புகளும் ஆலோசனை வழங்கினர். அவர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி. தேவைப்பட்டால் இது தொடர்பாக மீண்டும் ஒரு கூட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினார். இந்த ஆண்டு நகரத்தில், பிரம்மாண்டமாக விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் இருக்காது என பாக்யநகர் உட்சவ் சமிதி அமைப்பு ஏற்கனவே தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !