தேன்கனிக்கோட்டையில் பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
சென்னை; கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தில், முதல்முறையாக, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளன.
இந்திய தொல்லியல் துறையின், உதவி தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ், தொல்லியல் ஆர்வலர் அன்பு ஆகியோர், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், பெட்டமுகிலாலம் என்ற மலை கிராமத்தில், கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். குறியீடுகள்இது குறித்து, மத்திய தொல்லியல் துறையின், உதவி தொல்லியல் ஆய்வாளர் ரமேஷ் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, பெட்டமுகிலாலம் என்ற மலை கிராமத்தில் இருந்து கிழக்கே, 2 கி.மீ., தொலைவில் உள்ள வனத்தினுள், கிழக்கு நோக்கிய குகைத்தளம் உள்ளது. இதன் விதானத்திலும், பக்கவாட்டிலும் ஆய்வு செய்தபோது, அங்கு, வெள்ளை நிறத்தில் பாறை ஓவியங்கள் வரையப்பட்டிருந்ததை கண்டறிந்தோம்.
இவை, தேன்கனிக்கோட்டை ஒன்றியத்தில் கண்டறியப்பட்டுள்ள முதல் பாறை ஓவியங்கள்.இவற்றில், இரு புலிகள், காட்டுப்பன்றி, இரு மீன் உருவங்கள், குதிரையின் மீது அமர்ந்த நிலையில் காணப்படும் மனித உருவம், நின்ற நிலையில் காணப்படும் இரு மனித உருவங்கள், குறியீடுகள் போன்றவை உள்ளன. இவற்றில், புலியின் உருவம் மட்டும், 2.5 அடி உயரம்; 3 அடி நீளத்தில் உள்ளது. இரண்டு புலிகளின் உருவங்களும் பெரியதாக உள்ளதால், இவை சடங்கிற்காக தீட்டப்பட்ட ஓவியங்களாக இருக்கலாம். வேட்டையில் அதிக பொருள் கிடைக்கவும், புலிகளிடம் இருந்து காத்துக் கொள்ளவும், இந்த புலி ஓவியங்களின் முன் சடங்குகள் நடத்தப்பட்டிருக்கலாம்.இது போன்ற பாறை ஓவியங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஜெகதேவி, தாளாபள்ளி, கொல்லப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் காணப்படுகின்றன.
பெருங்கற்காலம்: இந்த மாவட்டத்தில் ஏற்கனவே, நரசிம்மையா, ராஜன் உள்ளிட்ட தொல்லியல் அறிஞர்கள், பெருங்கற்காலத்தை சேர்ந்த கல் திட்டை, கல் வட்டம், கற்பதுக்கை உள்ளிட்ட பெருங்கற்கால ஈமச் சின்னங்களை கண்டறிந்து உள்ளனர். இவற்றின் அருகிலேயே இந்த பாறை ஓவியங்களும் இருப்பதால், இவற்றின் காலம், 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். மேலும், இப்பகுதியில் கள ஆய்வு செய்தால், பெருங்கற்காலம் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று ஆதாரங்களை பெற முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.