கார்த்திகை பவுர்ணமி; திருவண்ணாமலையில் ஆறு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம், 24ம் தேதி, கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து, தினமும் சுவாமி திருவீதி உலாவும், 7ம் நாள் விழாவில், மஹாரத தேரோட்டமும் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக 2,668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் நேற்று மாலை, ‘மஹா தீபம்’ ஏற்றப்பட்டது. பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என கோஷமிட்டு, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். தொடர்ந்து, 11 நாட்கள் வரை எரியும், இந்த ‘மஹா தீபம்’ பக்தர்களுக்கு, 40 கி.மீ., வரை தெரியும். ‘மஹா தீபம்’ ஏற்றப்பட்டதை தொடர்ந்து, இரவு, தங்க ரிஷப வாகனத்தில், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று பவுர்ணமியொட்டி அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். தொடர்ந்து, , வரிசை கூண்டில் ஆறு மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.