விநாயகர் சதுர்த்தி: விதவிதமான சிலைகள்
உடுமலை: விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, மூன்று நாட்களே உள்ள நிலையில், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத களி மண் சிலைகள் விற்பனை அதிகரித்துள்ளது.விநாயகர் சதுர்த்திவிழா, வரும், 22ல் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், வீடுகள், பொது இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தி, நீர் நிலைகளில் கரைப்பதை பாரம்பரியமாக கொண்டாடிவருகின்றனர்.
இந்த சிலைகள், பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மற்றும் ரசாயனம் கலந்த வண்ணங்கள் பூசுவதால், குளம், கால்வாய் என நீர் நிலைகளில் கரைக்கும் போது சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.இந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வீடுகளில், பாரம்பரிய முறைப்படி, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத, களிமண்ணால் செய்யபட்ட சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.இதற்காக, களிமண் சிலைகள் தயாரிக்கப்பட்டு, உடுமலையிலுள்ள கடைகளுக்கு விற்பனைக்கு வந்துள்ளது.மண்பாண்ட விற்பனையாளர்கள் கூறியதாவது :களி மண், மணல் மற்றும் புற்று மண் ஆகியவற்றை இணைத்து, நீரில் ஊற வைத்து மண் வடிகட்டி, நன்கு பிசைந்து பசைபோல் மாற்றப்படுகிறது. அதற்கு பிறகு, பல்வேறு விநாயகர் வடிவங்களில் உள்ள அச்சுக்களில் வைத்து சிலைகள் உருவாக்கப்படுகிறது. பச்சை மண்ணில் செய்வதால் எளிதில் கரையும்.மேலும், இயற்கையான சாயம் மட்டுமே, இச்சிலைகளில் பூசப்படுகிறது. மசன கல், கிணத்துக்கல் ஆகியவற்றை சூளையில், அதிக வெப்பத்தில் சுடும் போது, தங்க நிறத்திற்கு மாறுகின்றன. அதனை, பொடியாக்கி, கரைத்து சிலைக்கு தங்க நிறச்சாயம் பூசப்படுகிறது.அதே போல், மஞ்சள், சந்தனம், குங்குமம் மற்றும் ஒரு சில செடிகளின் இலைகளிலும் வண்ணங்கள் தயாரித்து பூசப்படுகிறது. அரை அடி சிலை முதல், 4 அடி வரை, வடிவத்திற்கு ஏற்ப, களிமண் சிலைகள், 60 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.இவ்வாறு, கூறினர்.